SHARE
செல்வநாதன் NEWSREPORTER

தைப்பொங்கல் மற்றும் ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக பிரகடணப்படுத்தியமைக்கான கொண்டாட்டங்கள் கடந்த திங்கட்கிழமை 17 ஆம் திகதி Central Hall, Westminster இல் இடம் பெற்றது. பிரித்தானிய தமிழ்சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அங்கு உரையாற்றிய அரசியல் பிரமுகர்கள் பிரித்தானிய வாழ் தமிழ் சமூகத்தைப் பாராட்டி, பல துறைகளில் அவர்களின் பங்களிப்புகளிற்கான வாழ்த்துக்களையும் தைப்பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான தங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

ஆரம்ப நிகழ்வாக தழிழ் மக்களின் பாரம்பரிய இசையான பறை இசைநிகழ்ச்சி இடம்பெற்றது. பறை இசைக்கலைஞன் வாகீசன் தங்கவேல் தலைமையில் கோபிநாத் கந்தசாமி, நிதர்சன் லோகராசா, சிவானந்தராசா சிவதர்சன், விஸ்வர்த்தனன், துலக்சன் பாலசிங்கம் மற்றும் பகீரதன் பாக்கியராசா, யுவராஐ் குணரத்தினம், பகீரதன், சுஜீவன், பிரசாந்த்-ஜோ ஆகிய பறை இசைக்கலைஞர்கள் பறை இசை வழங்கினர்.

அதனை தொடர்ந்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களின் உரைகள், பாரம்பரிய தமிழ் கலாச்சார விழாக்களான பரதநாட்டியம், கர்நாடக இசைக்கான அபிநயங்கள் மற்றும் ஏனைய கலைநிகழ்ச்சிகள் ஆகியன நடைபெற்றன.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரித்தானியாவின் நிழல் வெளிவிவகார செயலாளர் மதிப்பிற்குரிய டேவிட் லாம்மி (Hon. David Lammy) அவர்கள் தமிழர்களிற்கான தனது ஆதரவையும் நீதிக்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியதுடன் தாம் தென்னாபிரிக்காவின் நிறப்பாகுபாட்டிற்கு தடைவிதிக்க ஆதரவாக செயற்பட்டமையையும் குறிப்பிட்டதோடு தற்போது இலங்கை போர்க்குற்றவாளிகள் மீது தடை விதிக்க கோருவதாகவும் தெரிவித்தார். மேலும் சர்வதேசம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை தாங்கள் நம்புவதாகவும் அதாவது, அப்பாவி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரித்தானிய அரசு கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதோடு சிறுபான்மை சமூகத்தின் சக உறுப்பினராக தமிழர்களுக்கு தமது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

பிரித்தானிய மிதவாதக்கட்சியின் (Liberal Democrats) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சேர் எட் டேவி (Sir Ed Davey) கருத்துத் தெரிவிக்கும் போது கொழும்பு மீது கடுமையாக இருக்க வேண்டிய நேரம் இதுவெனவும் இது தமிழர்களிற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையெனவும் மனித உரிமைகளுக்காக நாம் போராட வேண்டுமெனவும் மக்நிட்ஸ்கை தடைகள் போன்று இலங்கை அதிகாரிகளிற்கு இன்னும் அதிகமான செயற்பாடுகளை செயற்படுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், பழமைவாத கட்சியின் தலைவர் மதிப்பிற்குரிய ஆலிவர் டவுடன் (Hon. Oliver Dowden), கருத்துத் தெரிவிக்கும் போது “பிரித்தானிய தேசிய வாழ்வில் தமிழர்கள் ஒரு அங்கம். தமிழர்களின் பங்களிப்பிற்காக நாங்கள் நன்றி கூறுகிறோம்” எனத் தெரிவித்தார்.

Ilford South இற்கான பாராளுமன்ற உறுப்பினரும் நிழல் போக்குவரத்து அமைச்சருமான Hon Sam Tarry, இலங்கை போர்க்குற்றவாளிகள் மீதான தடைகளின் அவசியத்தை வலியுறுத்தியதுடன் ஒரு நாள் இராணுவமயமற்ற சுயநிர்ணய உரிமையுள்ள தமிழர் தாயகத்தைக் காண்போம் எனக்கூறினார்.

சிறு வணிகத் துறைக்கான அமைச்சர் Hon. Paul Scully, பிரித்தானிய வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் பிரித்தானிய வாழ் தமிழர்களின் முக்கிய பங்கை ஒப்புக்கொண்டதுடன் இலங்கையில் பொறுப்பு கூறல் மற்றும் நீதிக்கான தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, பிரித்தானியப் பராமரிப்புத் துறை அமைச்சர் Hon. Gillian Keagan, தற்போதைய தொற்றுநோய்க்கு எதிராகப் போராடுவதில்; தமிழ் சமூகத்தின் பங்களிப்பிற்கு தனது நன்றியைத் தெரிவித்ததோடு NHS இலுள்ள 12 மருத்துவர்களில் ஒருவர் தமிழர் என்று அவர் குறிப்பிட்டதுடன் மருத்துவர்களுக்கு மட்டுமின்றி தமிழ்த்தாதிய உத்தியோகத்தர்கள், சமூகப் பணியாளர்கள் மற்றும் பிரித்தானிய அரசின் முயற்சிகளுக்கு உதவிய அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரும், Carshalton & Wallington இன் பாராளுமன்ற உறுப்பினருமான Hon. Elliot Colburn ஐ.நா தீர்மானத்திற்கு அப்பால் சென்று இலங்கை அதிகாரிகளை இழைத்த போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியதன் அவசியம் குறித்து கருத்துத் தெரிவித்தார்.

பிரித்தானியாவின் சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான நிழல் செயலாளரான Hon. Wes Streeting, பிரித்தானிய வாழ்வில் தமிழர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், இலங்கையின் நடைபெறும் மோசமான மனித உரிமைகள் நிலைமை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியதுடன் ராஜபக்சவின் மீள்வருகையானது இலங்கையில் வாழும் அனைத்து மக்களின் எதிர்காலத்திற்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுததும் எனத் தெரிவித்தார்.

மேலும் Mitcham and Morden இன் பாராளுமன்ற உறுப்பினருமான Hon. Siobhain McDonaugh தமிழ் மக்களிற்கான நீதியை நிலைநாட்டுவதில் நாங்கள் எப்போதும் இணைந்து நிற்போம் என உறுதியளித்ததுடன் தமிழர்கள் மீதான தனது நீண்டகால அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புக்கூறலின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, லண்டன் சட்டசபை உறுப்பினரான Dr. Onkar Sahota, 1970 களில் இருந்து இன்று வரை தமிழர்களுடன் இணைந்து செயற்பட்ட வரலாற்றையும் நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான தனது அர்ப்பணிப்பையும் விவரித்தார்.

அதேவேளை இந்நிகழ்வில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு- காண்டீபன் கிறிஸ்ரி நிலானி

Print Friendly, PDF & Email