SHARE

சிறிலங்கா இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவை உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) பிரித்தானியா தடைசெய்ய அரசுக்கு அழுத்தத்தை வழங்குமாறு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் Taiwo Owatemi யிடம் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கிலான பொதுமக்கள் கொல்லப்பட்ட போது 58 ஆவது இராணுவ படைப்பிரிவிற்கு சவேந்திர சில்வாவே தலைமை தாங்கியிருந்தார். இவரது கட்டளையின் கீழே பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்றதற்கான ஆதராங்களை ITJP வெளியிட்டிருந்தது.

அதேவேளை இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டவர்கள் இன்னும் விடுதலைசெய்யப்படவில்லை. பெற்றோர் காணாமல் போன தமது பிள்ளைகளின் புகைப்படங்களுடன் இன்றும் வீதிகளில் இருந்து போராடிவருகின்றனர். அதற்கான தகுந்த பதில் இன்றுவரையில் வழங்கப்படவில்லை.

எனவே சவேந்திர சில்வா மீது ஏற்கனவே பயணத்தடை விதித்துள்ள அமெரிக்காவின் வழியை பின்பற்றி பிரித்தானியாவும் தடை விதிக்கவேண்டும் பிரித்தானிய புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையிலேயே நேற்றைய தினம் பிரித்தானியாவின் Coventry North West தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Taiwo Owatemi உடன் மெய்நிகர் வழி ஊடாக சந்திப்பினை மேற்கொண்ட புலம்பெயர் தமிழ் செயற்பாட்டார்கள் சவேந்திர சில்வாவை தடை செய்ய பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சந்திப்பில் இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தின் (ICPPG) பணிப்பாளர் அம்பிகை செல்வகுமார் பிரித்தானிய தொழில் கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் (Tamils For Labour) தலைவர் திரு.சென் கந்தையா மற்றும் செயற்பாட்டாளர்களான கபிலன் அன்புரெத்தினம் நிலக்ஜன் சிவலிங்கம் அஜிபன் ராஜ் ஜெயந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Print Friendly, PDF & Email