SHARE

யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்களை வீதியில் வழிமறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இன்று மட்டுவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில் குறித்த நிகழ்வு நடைபெறும் இடத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க திட்டமிடப்பட்டது.

அதில் கலந்துகொள்வதற்காக முல்லைத்தீவில் இருந்து பேருந்தில் வருகைதந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை மட்டுவில் அம்மன் கோவிலுக்கு அருகில் பொலிஸார் வழிமறித்துள்ளனர்.

அத்தோடு வாகனத்தில் இருந்து எவரையும் இறங்க விடாதவாறு, வாகனத்தின் இரு வாசல்களிலும் காவலுக்கு நின்ற பொலிஸார் சாரதியையும் கடும் விசாரணைக்கு உட்படுத்தினர்.

இருப்பினும் பேருந்தில் இருந்து கீழிறங்கிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வீதியில் அழுது புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதேவேளை, மத்திய நிலைய பகுதியில் பெருமளவான பொலிஸார், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email