SHARE

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் தலைமையில் தொடரும் உயர்மட்ட இராஜதந்திர நகர்வுகள்

இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பிரித்தானியாவின் ஸ்ரெதம் (Streatham) பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான, மதிப்பிற்குரிய பெல் ரிபெய்ரோ அடி (Hon.Bell Ribeiro-Addy MP) அவர்களுடன் பிரித்தானியாவில் மற்றுமொரு உயர்மட்ட சந்திப்பு ஒன்று இன்று (22.04.2022) காலை மெய்நிகர்வழி (Zoom) ஊடாக இடம்பெற்றுள்ளது.

சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளுமான திரு கீத் குலசேகரம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில் தொழில்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் (Tamils for Labour) பணிப்பாளர் திரு சென் கந்தையா மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

கீத் குலசேகரம் அவர்கள் தனது தலைமை உரையின் போது, இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் 140,000 இற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான  இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்ய போதுமான ஆதாரங்களை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு ஏற்கனவே ITJP சமர்ப்பித்திருப்பதையும், அதுபோல் தற்போதும் தொடரும் கடத்தல்கள் சித்திரவதைகளில் இராணுவம் ஈடுபட்டு  வருவதற்கான ஆதாரங்களாக இலங்கையில் கடந்த இரு வருடங்களிற்குள் சித்திரவதைக்குள்ளாகிய 200 பேரின் வாக்குமூலங்களின் அடிப்படையிலான அறிக்கையை (ICPPG) சமர்ப்பித்திருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டினார்.

இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள் கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும், சந்திப்பில் கலந்துகொண்ட தங்கள் தொகுதியிலுள்ள  சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடி சாட்சி என்றும் தெரிவித்தார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் அடுத்த கட்ட நடவடிக்கையாக பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து சவேந்திர சில்வாவினை தடை செய்யக்கோரி அழுத்தம் கோரி வருவதையும் இதன்மூலம் இலங்கையில் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவரும் தமது உறவுகளை பாதுகாக்க முடியும் என அவர்கள் நம்புவதாகவும் திரு கீத் குலசேகரம் எடுத்துரைத்தார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போதும் அதற்குப்பின்னரும் தொடர்ந்து இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படவேண்டியதன் அவசியத்தையும், அமெரிக்கா சவேந்திர சில்வாவை தடை செய்தமையை போன்று பிரித்தானியாவும் தடை செய்யவேண்டுமெனவும் தனது உரையில் மேலும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய சென் கந்தையா அவர்கள், 30 வருடங்களிற்கு மேலாக இலங்கையில் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களிற்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக பிரித்தானிய அரசிற்கு அழுத்தம் கொடுப்பதிலும் பிரித்தானிய தமிழ்சமூகத்துடன் தொழிற்கட்சி கொண்டிருக்கும் நீண்ட வரலாற்று உறவினை கோடிட்டுக் காட்டியதுடன் இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்வதற்கு அனுப்பிய கோரிக்கைகளிற்கு சரியான பதிலை FCDO தராதது வருத்தத்தைத் தருவதுடன், பிரித்தானியா  இதுவரை தடைசெய்வதற்குரிய எதுவித முயற்சியும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும் பிரித்தானிய பொருளாதாரத்தில் தமிழர் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும், அவர்கள் கோரிக்கைக்கு செவிமடுக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

மேற்படி சந்திப்பில் சித்திரவதையில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களும் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுமான டொறிங்ரன் சூசைதாஸ், சுஜீவன், சசிகரண் செல்வசுந்தரம், சுயந்தினி மற்றும் கிறிஸ்ரி நிலானி காண்டீபன்    ஆகியோரும் கலந்து  கொண்டனர். சவேந்திர சில்வா தலைமையிலான படைகளினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோர் தங்கள் சித்திரவதை அனுபவங்களை பாராளுமன்ற உறுப்பினருக்கு எடுத்து கூறினர்.

மேலும் கீத் குலசேகரம் அவர்கள் தனது தொகுப்புரையின் போது பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட முன்பிரேரணைக்கு (EDM 64) ஆதரவை வழங்குமாறும் தங்கள் தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்யக்கோரி FCDO விற்கு அழுத்தம் கொடுக்கும் படியும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்து தரும்படியும் கேட்டுக்கொண்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களிற்கு நீதியினைப் பெற்றுக்கொள்ளவதற்கு ஏதுவாகவும் தொடர்ந்து இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகளை நிறுத்துவதற்கு ஏதுவாகவும் தமிழர்களிற்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு (APPGT) மற்றும் மக்நிட்ஸ்கை தடைகளிற்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுக்களில் (APPG for Magnitsky Sanctions) இணைந்து செயற்பட அழைப்பு விடுத்ததுடன் சவேந்திர சில்வாவினை தடை செய்யக்கோரும் சிறிய காணொளியினை வெளியிடுமாறும் கேட்டுக்கொண்டார்.

அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியதுடன் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களிற்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் திரு. கீத் குலசேகரம் அவர்களால்  தொகுப்புரையின் போது முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாகவும்  உறுதியளித்துள்ளார்.

Print Friendly, PDF & Email