SHARE

வவுனியாவில் இருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்றுள்ளனர்.

இலங்கையில் இருந்து 75 இலங்கைத் தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகாளாகச் சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கபட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை மேலும் 5 பேர் அகதிகளாகச் சென்றுள்ளனர்.

வவுனியா மாவட்டம் சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த ராஜலெட்சுமி, தயாளன், லதா மற்றும் அவரது ஆறு வயது மகள் தன்ஷிகா, 2 மாத கை குழந்தை தக்சரா என ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரே ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரையில் வந்து இறங்கியுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்குப் பின்னர் அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள்.

தன் கணவருக்கு போதிய வருமானம் இல்லை என்றும் இதேநிலை நீடித்தால், இலங்கையில் பட்டினி சாவு ஏற்பட்டு அனைவரும் உயிரிழக்க நேரிடும் என்றும் எனவே உயிரை காப்பாற்றிக்கொள்ள இரண்டு மாத கைக் குழந்தையுடன் கடலில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக இலங்கை தமிழ் பெண் லதா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் உணவு பஞ்சம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இலங்கை தமிழர்கள் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் உள்ள தீவிர கண்காணிப்பையும் மீறி பைப்பர் படகுகளில் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றவண்ணம் உள்ளனர்.

இதன்படி, கடந்த மார்ச் மாதம் 22ம் திகதி முதல் இன்று வரை 80 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email