SHARE

நிழல் அமைச்சர் மதிப்பிற்குரிய மற் வெஸ்ரேண் (Hon Matt Western MP) அவர்களுடனான சந்திப்பு –

இலங்கையில் இடம்பெற்ற தமிழ்மக்களுக்கு எதிரான இனப்படுகொலை யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட பாரிய குற்றங்களுக்காகவும், தற்போதும் இலங்கையில் தொடரும் ஆட்கடத்தல் மற்றும் சித்திரவதைக்கு பொறுப்பு கூறவேண்டிவர் என்ற அடிப்படையிலும், இலங்கை இராணுவ தளபதியான சவேந்திர சில்வாவை பிரித்தானிய அரசு தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் கடந்த சனிக்கிழமை (21/05/2022) அன்று பிரித்தானியாவின் கல்வித்துறைக்கான நிழல் அமைச்சரும் (Shadow Minister for Education) லீமிங்டன் ஸ்பா பகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய மற் வெஸ்டேன் (Hon Matt Western MP) அவர்களுடனான முக்கிய இராஜதந்திர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் யுத்தத்தினாலும் சித்திரவதையாலும் பாதிக்கப்பட்டு, உயிர் பாதுகாப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறி பிரித்தானியால் அடைக்கலம் கேட்க நிர்பந்திக்கப்பட்டிருக்கும் தமிழர்களில் லெமிங்கன் ஸ்பா பகுதியில் வாழ்பவர்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பை மனித உரிமை செயற்பாட்டாளரும் மூத்த சட்ட ஆலோசகருமான திரு கீத் குலசேகரம் அவர்கள் தலைமை தாங்கினார்.

அத்துடன் தொழிற்கட்சிக்கான தமிழர்கள் (Tamils For Labour) என்ற அமைப்பின் தலைவரான திரு சென் கந்தையா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புக்கருத்துக்களை வழங்கியதுடன் இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தின் (ICPPG) ஊடக இணைப்பாளரான திருமதி கிறிஸ்ரி நிலானி காண்டீபன் அவர்களும் கலந்து கொண்டார்.

இலங்கை அரச பயங்கரவாதத்தினால் சித்திரவதைக்குட்பட்டு தப்பிவந்த லீமிங்டன் ஸ்பா பகுதியைச் சேர்ந்த ஜனுஸ்டன் நவரத்தினம், ரஜிசன் சிவலிங்கம், துபாரகன் யோகேந்திரன், சாருபிரியன் சிறிஸ்கரன் மற்றும் ஜோன் கெனடி நிறோஷன் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதன்போது இலங்கையில் இடம்பெற்ற இறுதியுத்தத்தில் பாரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்ய வேண்டுமெனவும் அவர்களை சர்வதேச நீதிமன்றின் முன்னிறுத்த வேண்டுமெனவும் இதன் மூலமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு நீதியை பெற்றுக் கொடுக்க முடியுமெனவும் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

விசேடமாக இலங்கையின் தற்போதைய இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திரசில்வாவினை பிரதான போர்க்குற்றவாளிகளில் ஒருவர் என உறுதிசெய்து அமெரிக்கா அவர் மீது பயணத்தடை விதித்தது போல் பிரித்தானியாவும் தடை விதிக்க வேண்டுமெனவும் அமெரிக்காவினால் அதனை செய்ய முடியுமாயின் ஏன் பிரித்தானியாவால் செய்ய முடியாது போனது என கீத் குலசேகரம் அவர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளருக்கு சவேந்திர சில்வா மீதான தடையை கோரி ஏற்கனவே பல பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியது போல் தங்கள் தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழர்கள் சார்பில் தாங்களும் பிரித்தானிய அரசை வலியுறுத்த வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இறுதியாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தான் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு இது தொடர்பில் அழுத்தம் கொடுப்பதாகவும் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கு சக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஆதரவினை பெற்றுத்தருவதாக உறுதியளித்ததுடன் சவேந்திர சில்வா மீதான தடை நடவடிக்கையை விரைவுபடுத்தி இலங்கையில் தற்போது தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இனவழிப்பு செயற்பாடுகளை நிறுத்துவதற்கு சர்வதேச ரீதியில் அழுத்தங்களை பிரயோகிக்க உதவுவதாகவும் உறுதியளித்தார்.

Print Friendly, PDF & Email