SHARE

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அவல நிலைக்கு எதிராக எழுச்சிபெற்றுள்ள மக்கள் போராட்டத்தை திசைதிருப்ப இனவாதத்தைக் கையிலெடுத்துள்ள அரசாங்கம் தனது முழுமையான அனுசரணையுடன் குறுந்தூர்மலையில் நீதிமன்ற தடையையும் மீறி கட்டப்பட்டுள்ள பௌத்த விகாரையில் கடந்த 12.06.2022 அன்று புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்ய முயற்சித்துள்ளது.

பிரதேச மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. இதனைக் கண்டிருப்பதுடன், அரசாங்கத்தின் இன்றைய பொருளாதார பொருளாதார வீழ்ச்சி எத்தகைய மனிதபிமானச் செயற்பாடு என்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

2008-2009ஆம் ஆண்டுகளில் நடந்த யுத்த இறுதிகாலத்தின் பொழுது, இது மனிதாபிமானத்திற்கான ஒரு யுத்தம் என்று உலகத்திற்குக் காட்டுவதற்காக, இராணுவத்தினரின் ஒரு கையில் துப்பாக்கியும் மறுகையில் பாடசாலை சிறுமியின் படத்தையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.

இதன் மூலம் இலங்கை இராணுவம் என்பது சிறுவர்களின் கல்வி தொடக்கம் அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகளிலும் அக்கறை செலுத்துவதாக உலகத்திற்குக் காட்ட இலங்கை அரசாங்கம் முயற்சித்தது. ஆனால் அதே யுத்தத்தை நடத்திய ராஜபக்ச குடும்பத்தினரின் இன்றைய ஆட்சி அதிகாரத்தின்கீழ் குழந்தைகளுக்கான பாடசாலைப் புத்தகங்கள் இல்லை, அப்பியாசக் கொப்பிகள் இல்லை, பாடசாலை உபகரணங்கள் இல்லை என்ற நிலைக்கு முழு நாட்டையும் தள்ளியிருக்கிறது.

அப்பொழுது யுத்தத்திற்கு ஆதரவு திரட்டுவதற்காக மனிதாபிமான முத்திரை குத்தினார்கள். இப்பொழுது ஒட்டுமொத்த நாட்டின் பாடசாலைச் சிறார்களும் தமது கல்விகற்கும் உரிமையை இழந்து தவிக்கின்றனர். இதுதான் இலங்கை அரசாங்கத்தின் மனிதாபிமான வெளிப்பாடா? அல்லது நிர்வாகத் திறமையா? நாட்டின் இத்தகைய நிலைக்கு இன்றைய ஆட்சியாளர்கள் எத்தகைய விளக்கத்தைக் கொடுக்கப்போகின்றனர்? யுத்தம் நடைபெற்ற காலத்தில் வடக்கு-கிழக்கில் அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையை அன்றைய இலங்கையின் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியிருந்தனர்.

தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை ஆயுதப்படைகளின் துணையுடன் அடக்கியொடுக்கினார்கள். தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக பாரிய யுத்தத்தைக் கொண்டு நடாத்தினார்கள். இதனால் ஒட்டுமொத்த நாடும் அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள் இன்றி தவிக்கின்றது.

இலங்கையின் நிலைமையை அவதானித்து வரும் ஐ.நா. “இலங்கை பாரிய மனிதாபிமான பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளது. இவை ஒருபுறமிருக்க, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்கள் அடுத்த வாரத்திலிருந்து வெள்ளிக்கிழமையும் அரசாங்க ஊழியர்களுக்கு விடுமுறை நாளாகக் கணிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

அத்துடன் ஏற்கனவே அரச உத்தியோகத்தர்கள் விரும்பின், ஐந்து வருடம் சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடுகளுக்குச் சென்று உழைத்துக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் நடந்தகாலத்தில் ஏறத்தாழ பதினைந்து இலட்சம் தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். இவர்களில் பல்லாயிரக்கணக்கான புத்திஜீவிகளும் துறைசார் வல்லுனர்களும் அடங்குவர்.

அதேபோன்று தமிழ்த் தேசிய இனத்தின் கோரிக்கை நியாயமானது என்று வாதாடிய சிங்கள ஜனநாயக முற்போக்குவாதிகளும் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இப்பொழுது முழுநாட்டையும் கொள்ளையடித்து குட்டிச்சுவராக்கி, நிர்வாகச் சீர்கேடுகளை உருவாக்கி, நாட்டில் எஞ்சியிருக்கின்ற நிர்வாகத் திறமையாளர்களையும் துறைசார் வல்லுனர்களையும் வெளியில் அனுப்ப முயற்சிக்கின்றீர்கள்.

கடந்த சில மாதங்களாக இந்தியா ஏறத்தாழ மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரிசி, பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு அத்தியாவசிய மருந்துப்பொருட்கள், மற்றும் பசளை போன்றவற்றை வழங்கிவருகிறது.

அந்த உதவிகள் அடுத்த சில நாட்களில் முடிவடையும் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் பின்னரான காலப்பகுதியில் ஏற்படப்போகின்ற தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு இதுவரை எத்தகைய திட்டமும் தீட்டப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை.

அடுத்தடுத்த வாரங்களுக்கு எரிபொருள் கிடைக்குமா? எரிவாயு கிடைக்குமா? மின்சாரம் தடையின்றி கிடைக்குமா? அத்தியாவசிய உணவுப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்குமா? உயிர்காக்கும் மருந்துகள் தடையின்றி கிடைக்குமா என்பது நிச்சயமற்ற நிலையில் அச்சமான சூழல்நிலையே நிலவுகின்றது. அரசாங்கத்தாலும் எதனையும் திட்டமிட முடியவில்லை.

அரசாங்கத்தின் மோசமான நிர்வாக சீர்கேடுகளினால் பொதுமக்களலாலும் எதனையும் திட்டமிடமுடியவில்லை. இந்த இலட்சணத்தில் நீங்கள் தொடர்ந்தும் ஆட்சியதிகாரத்தில் இருப்பதற்கு தகுதியானவர்கள்தானா என்பதை உங்கள் மனச்சாட்சியுடன் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

நாட்டின் இவ்வளவு சீர்கேடுகளுக்கு மத்தியில் நாட்டின் உண்மையான பிரச்சினைகளை அடையாளம் காணாமல், இன்னும் சிங்கள, தமிழ் கலவரங்களை உருவாக்கி, மக்களை திசைதிருப்பி, அவர்களை ஒருவருக்கொருவர் மோதவிட்டு இனவாதத்தில் குளிர்காயத்தான் முயச்சி செய்கின்றீர்கள்.

ஒரு சிங்கள மகன்கூட இல்லாத குருந்தூர் மலையில், காலாகாலமாக சைவ மக்கள் சிவ வழிபாட்டை நடாத்திவரக்கூடிய அந்த மலையில், நீதி மன்றத் தடைகளையும் துச்சமென மதித்து, பாரிய பொளத்த தாதுகோபுரத்தை எழுப்பியதன் நோக்கமென்ன? இது ஒரு தொல்பொருள் அமைவிடமாக இருந்தால் அதுஒரு தொல்பொருள் இடமாகப் பராமரிக்கப்பட வேண்டுமே தவிர, அதனை ஒரு பௌத்த இடமாக மாற்றுகின்ற உங்களது மேலாதிக்க சிந்தனை என்பது நாட்டை மேலும்மேலும் சீரழிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

பௌத்த மக்களே இல்லாத பிரதேசங்களில் இராணுவத்தைக் கொண்டு நீதிமன்ற உத்தரவுகளைப் புறந்தள்ளி பெளத்த சின்னங்களை உருவாக்குவதும் பின்னர் அதனைப் பாதுகாப்பதற்காக இராணுவத்தை நிலைநிறுத்துவதும், அந்த இடங்களைச் சுற்றியுள்ள நிலங்களை ஆக்கிரமிப்பதும் தொடர்ச்சியாக சிங்கள தமிழ் இனமுறுகலைப் பேணுவதையே அரசாங்கம் விரும்புவதைக் காட்டி நிற்கிறது.

ஒருபுறம் அரச ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் அவர்களை வெளிநாடுகளுக்குச் செல்லும்படி கேட்கிறீர்கள். மறுபுறம் வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி மக்களைப் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளுகின்றீர்கள்.

அதேசமயம் வடக்கு-கிழக்கில் பௌத்த விகாரைகளையும் சிங்கள குடியேற்றங்களையும் மேற்கொள்வதற்கு மிகவும் ஆக்கிரோஷமாக வேலைசெய்கிறீர்கள். இதற்கான பணத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்கின்றீர்கள்? அரசாங்கம் இத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் தனது இனவாத சிந்தனையிலிருந்து விடுபடுவதற்குத் தயாரில்லை என்பதையே இத்தகைய செயற்பாடுகள் வெளிக்காட்டுகிறது.

கொழும்பில் இருக்கின்ற ஐ.நா. தூதுவர்களும் சர்வதேச நிதிநிறுவனங்களின் பிரதிநிதிகளும் சர்வதேச ராஜதந்திரிகளும் இலங்கை அரசாங்கத்தின் இத்தகைய மோசமான நடவடிக்கைகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை முழுமையாக நிறுத்துவதற்கான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.

முன்னைய மைத்திரி-ரணில் அரசாங்கத்தில் 19ஆவது திருத்தத்தினூடாக ஜனாதிபதியின் சில அதிகாரங்கள் பாராளுமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தவுடன், 20ஆவது திருத்தத்தினூடாக பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மீண்டும் பலம்மிக்க ஒரு ஜனாதிபதியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.

கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டு நாட்டை நாசமாக்கிய இரண்டரை வருடங்களின் பின், இப்பொழுது மீண்டும் பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்குவதற்கான 21ஆவது திருத்தம் பற்றி பேசுகிறார்கள். இவற்றையெல்லாம் தாம் விரும்பியவாறு விரும்பியவுடன் அரசாங்கத்தாலும் எதிர்க்கட்சியாலும் செய்ய முடியுமாக இருந்தால், ஒரு முறையான அதிகாரப்பகிர்வினூடாக, எழுபதாண்டுகால இனமோதலுக்கான நிரந்தரத்தீர்வை ஏன் காணமுடியாது?

சர்வதேச ராஜதந்திரிகளும், ஐ.நா.வின் பிரதிநிதிகளும், சர்வதேச நிதி நிரிநிறுவனங்களின் பிரதிநிதிகளும் இலங்கையின் பொருளாதாரத்தைத் துக்கிநிறுத்த வேண்டுமாக இருந்தால், இதனையும் கவனத்தில் எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம். இப்பொழுது நாட்டில் நிலவுகின்ற நெருக்கடியைத் தீர்த்து, அந்நிய முதலீடுகளை உள்வாங்கி, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு கண்டறியப்பட வேண்டியது முதற்படியாகும் என்றுள்ளது.

Print Friendly, PDF & Email