SHARE

ஐ.நா பொதுச்சபையின் 67வது கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளமாட்டார் என்று சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் பந்துல ஜெயசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நியுயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்திருந்த போதும், திடீரென அதிலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.

வரும் 26ம் நாள் பிற்பகல் அமர்வில் அவருக்கு உரையாற்றுவதற்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையிலேயே திடீரென அவர் இந்தப் பயணத்தைக் கைவிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச 2005ம் ஆண்டு சிறிலங்கா அதிபராகப் பதவியேற்ற பின்னர், எல்லா பொதுச்சபைக் கூட்டங்களிலும் பங்கேற்று வந்துள்ளார்.

அவர் பொதுச்சபைக் கூட்டத்தைத் தவறவிடும் முதல் சந்தர்ப்பம் இதுவேயாகும்.

என்னிம் திடீரென அவர் நியுயோர்க் பயணத்தை நிறுத்தியுள்ளதற்கான காரணத்தை சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் வெளியிடவில்லை.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட பந்துல ஜெயசேகர, “சிறிலங்கா அதிபர் இதற்கு முன்னைய கூட்டங்களில் சிறிலங்கா குழுவுக்குத் தலைமையேற்று பொதுச்சபைக் கூட்டங்களில் பங்கேற்றுள்ள போதிலும், நாட்டின் தலைவர் தான் இதில் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.

இதற்கு முன்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சந்திரிகா குமாரதுங்க போன்றவர்களும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

சிறிலங்கா அதிபருக்குப் பதிலாக, ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் சிறிலங்கா குழுவுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமை தாங்கவுள்ளார். அவர் இன்று நியுயோர்க் புறப்படவுள்ளார்.

Print Friendly, PDF & Email