SHARE

சிறிலங்காவுக்கு உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொண்டிருந்த ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் நிபுணர் குழு நேற்று தமது பணிகளை முடித்துக் கொண்டு ஜெனிவா திரும்பியுள்ளது.

இதையடுத்து இந்த ஆண்டு பிற்பகுதியில் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்காவுக்கு வருவார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்க வேண்டிய நிலையிலேயே உண்மை கண்டறியும் குழு சிறிலங்கா வந்திருந்தது என்று கொழும்பிலுள்ள ஐ,நா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவினர் சிறிலங்கா அமைச்சர்கள் பசில் ராஜபக்ச, ஜி.எல்.பீரிஸ், ரவூப் ஹக்கீம், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்களையும், அரசசார்பற்ற நிறுவனங்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துப்

பேசியிருந்தனர்.

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் ஆசிய பசுபிக், மத்தியகிழக்கு, வடஆபிரிக்க நாடுகளுக்கான கிளையின் தலைவர் ஹன்னி மெகாலி தலைமையிலான இந்தக் குழுவில் மூன்று அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email