SHARE

சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான- மிதக்கும் ஆயுதக்களஞ்சியமாகச் செயற்படும் – கப்பல் ஒன்றை ஐக்கிய அரபுக் குடியரசு தடுத்து வைத்துள்ளது.

கடற்கொள்ளையர்களின் ஆபத்துமிக்க கடற்பகுதியில் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும், பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஆயுதங்களை வாடகைக்கு கொடுக்கும் மிதக்கும் ஆயுதக்களஞ்சியமே தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா கொடியுடன் ஐக்கிய அரபுக் குடியரசு கடலில் தரித்து நின்ற ‘சிந்துபாத்‘ என்ற மிதக்கும் ஆயுதக்களஞ்சியமான கப்பலே, கடந்த முதலாம் நாள் அந்த நாட்டு கடலோரக் காவல்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் Avant Garde Maritime Services என்ற நிறுவனமே இயக்கி வருகிறது.

இந்த நிறுவனம் சிறிலங்காவுக்குத் தெற்கிலும், செங்கடலிலும் மேலும் இரு மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களை கொண்டுள்ளது.

இந்த மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களில் உள்ள தன்னியக்க துப்பாக்கிகள், வெடிபொருட்கள், உடற்கவசங்கள், இலகு இயந்திரத் துப்பாக்கிகள், இரவுப்பார்வை கருவிகள் போன்றவற்றை பாதுகாப்பு நிறுவனங்கள் வாடகைக்குப் பெற முடியும் என்று Avant Garde நிறுவனத்தின் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு குடியரசு, சவூதி அரேபியா, யேமன் போன்ற நாடுகளில் பாதுகாப்பு நிறுவனங்கள் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய நிறுவனங்களின் ஆயுதங்கள், வெடிபொருட்களை இந்தக் கப்பலில் நாளொன்றுக்கு 25 டொலர் வாடகைக் கட்டணம் செலுத்தி பாதுகாக்கவும் முடியும்.

சிந்துபாத் கப்பலில் உள்ள ஆயுதங்களின் எண்ணிக்கையை வெளியிட Avant Garde நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி மறுத்து விட்டபோதும், அந்த ஆயுதங்கள் சிறிலங்கா அரசுக்குச் சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

“சிந்துபாத் கப்பலில் இருந்த எவரும் கைது செய்யப்படவில்லை. கப்பலில் உள்ளவர்களிடம் விசாரணை மட்டும் நடத்தப்பட்டுள்ளது.

தடுப்புக் கைதிகள் போல அவர்கள் நடத்தப்படவில்லை.

கப்பல் சோதனையிடப்பட்ட போது, சிறிலங்கா அரசுடன் இணைந்த கூட்டு முயற்சி என்ற நம்பகத்தன்மையை நிரூபித்து விட்டோம்.

5 – 7 நாட்களுக்குப் பின்னர் கப்பல் விடுவிக்கப்பட்டு விட்டது.” என்றார் அவர்.

இந்தக் கப்பல் தொடர்பாக விசாரிக்கப்பட்டதை ஐக்கிய அரசு குடியரசு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் கப்பல் கைப்பபற்றப்பட்ட புஜாய்ரா பகுதியின் சட்டநடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

இதற்கிடையே, மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களில் உள்ள ஆயுதங்கள் தவறான கைகளுக்குப் போய்விடக் கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அனைத்துலக பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, மேஜர் சேனாதிபதி,  “நாம் மிகவும் உயர்ந்த பாதுகாப்பை அளித்துள்ளோம்.

எந்தநேரத்திலும், சிறிலங்காவின் ரக்ன ஆரக்சக லங்கா நிறுவனத்தின் கடல் பாதுகாப்பு அதிகாரிகள் மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.” என்று கூறியுள்ளார்.

ரக்ன ஆரக்சக சேனா பாதுகாப்பு நிறுவனம், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவினால், உருவாக்கப்பட்டு நடத்தப்படுவதாகும்.

இது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படுகின்ற போதும், கோத்தாபய ராஜபக்சவே அதனை நிர்வகித்து வருகிறார்.

அத்துடன், தரையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா இராணுவத்தினரையும், கடல் பாதுகாப்பில் சிறிலங்கா கடற்படை கொமாண்டோக்களையும் ஈடுபடுத்தி பெருமளவு வருமானத்தை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களையும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபயவே நடத்தி வருவதாகவும் நம்பப்படுகிறது.

விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் சிறிலங்கா படையினருக்கு கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி கோத்தாபய ராஜபக்ச அனைத்துலக அளவில் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளது இந்தச் சம்பவத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Print Friendly, PDF & Email