SHARE

20 வயதான வடிவேல் கேசவப்பிள்ளை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரின் போது தனது வலது கையை இழந்துள்ளார். இவர் தமிழ்ப் புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பின் மூலம் இணைக்கப்பட்டவர். தற்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பயிற்சிநெறி மற்றும் நிதியுதவியுடன் கேசவப்பிள்ளை சிறியதொரு உணவுவிடுதி ஒன்றை நடாத்தி வருகிறார்.

அண்மையில் திருமணம் செய்து கொண்ட இவர், கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு நகரில் உணவு விடுதி ஒன்றை சொந்தமாக ஆரம்பிக்கும் வரை தன்னால் தனது வாழ்வைக் கொண்டு நடாத்த முடியவில்லை எனக் கூறுகிறார்.

“நான் இந்த நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னர், சிறியதொரு வியாபார நிலையத்தை நடாத்தி வந்தேன். இதன் மூலம் கிடைத்த வருமானம் போதியதாக காணப்படவில்லை. தற்போது இவ் உணவு விடுதியை நடாத்துவதன் மூலம் நல்ல வருவாயை ஈட்ட முடிகிறது. அத்துடன் எனது குடும்பத்தின் தேவையையும் பூர்த்தியாக்க முடிகிறது” என கேசவப்பிள்ளை மேலும் கூறுகிறார்.

யுனிசெப், அனைத்துலக தொழிலாளர் அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டம் போன்றன இணைந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் தமது வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக வழங்கிய வியாபார முகாமைத்துவம் மற்றும் வாடிக்கையாளரைக் கவனிக்கும் பயிற்சிநெறியை 2012ன் ஆரம்பத்தில் கேசவப்பிள்ளையும் பெற்றிருந்தார்.

மனிதாபிமான பாதுகாப்புக்கான ஐ.நா நம்பிக்கை நிதியத்தால் இத்திட்டத்திற்காக வழங்கப்பட்ட ரூ 78,000 அதாவது 600 அமெரிக்கா டொலர்களை கேசவப்பிள்ளை மானியமாகப் பெற்றுக் கொண்டார்.

சிறிலங்காவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் வடக்கு கிழக்கை மையப்படுத்தியே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த பல சிறிலங்கர்களில் கேசவப்பிள்ளையும் ஒருவராவார்.

2007ல் ஒருநாள் பலசரக்குப் பொருட்கள் வாங்குவதற்காக சென்றுகொண்டிருந்த வழியில், சாரதியாகப் பணியாற்றிய 34 வயதான ஆனந்தராசா செல்வரட்ணம் படுகாயமடைந்தார். இதன்பின்னர் இவர் தனது சாரதித் தொழிலையும் இழந்தார். சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் செல்வரட்ணம் தற்போது கோழிப் பண்ணை ஒன்றையும் மிருகங்களுக்கான உணவுகளை வழங்கும் நிலையம் ஒன்றையும் நடாத்தி வருகிறார். இவர் 2012ன் ஆரம்பத்தில் பெற்றுக் கொண்ட நிதியுதவியைக் கொண்டு 200 கோழிக் குஞ்சுகளை வாங்கினார். பின்னர் இவற்றுள் நூறு கோழிகளை இலாபத்துடன் விற்றார். அதன் மூலம் கிடைத்த பணத்தை இவ்விரு வியாபாரத்திலும் முதலீடு செய்துள்ளார்.

2001ல், மதுசா கணபதிப்பிள்ளை தமிழீழ விடுதலைப் புலிகளால் படையில் இணைக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் வரை இவர் தனது குடும்பத்தவர்களுடன் மீள இணைக்கப்படவில்லை. மதுசா கணபதிப்பிள்ளை செப்ரெம்பர் 2011ல் ‘பாதிக்கப்பட்ட சமூகத்தவர்கள் தமது வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கான திட்டத்தின்’ கீழ் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். இதன் மூலம் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார். தற்போது இவர் 450 தொழிலாளர்களை இணைத்துக் கொண்ட நுண்கடன் திட்டத்தை மேற்பார்வை செய்கிறார். இளங்கலைப் பட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான உயர்கல்வியைத் தொடர மதுசா திட்டமிட்டுள்ளார்.

“ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இதனால் மேலும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். மனிதாபிமான பணியாளர் என்ற வகையில் என்னால் பலருக்கு உதவமுடிகிறது” என மதுசா கூறுகிறார்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரப்பட்ட யுத்தமானது ஆசியாவில் மிக நீண்ட காலம் இடம்பெற்ற யுத்தங்களில் ஒன்றாகக் காணப்படுகிறது. பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கும் சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கும் இடையில் ஏற்பட்ட இனமுரண்பாடே உள்நாட்டு யுத்தமாக உருவெடுத்தது. சிறிலங்கா அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட ஐ.நா வல்லுனர்களால் 2011ல் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்புக்களும் பொதுமக்களுக்கு எதிராக பல்வேறு மீறல்களை மேற்கொண்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

Print Friendly, PDF & Email