SHARE

சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச இம்மாத இறுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை இல்லாதொழிப்பதன் அவசியம் குறித்து தான் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக அவர் இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய – சிறிலங்கா உடன்பாட்டின் மூலமே 13வது அரசியலமைப்புத் திருத்தம் உருவாக்கப்பட்டிருந்தது.

இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.

அதேவேளை, இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காணப் போவதாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்திய அரசியல் தலைவர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்தநிலையிலேயே கோத்தாபய ராஜபக்சவும், சிங்களத் தேசியவாதக் கட்சிகளும் 13வது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர், சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச இதுவரை இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email