SHARE

– தமிழீழ உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுடர் –

பிரித்தானியாவில் நடைபெற்றுவரும் முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வுகளில், பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) தமிழீழ தேசியக்கொடியை ஏற்ற மறுத்து வருவது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வேதனையை தோற்றுவித்து வருகின்றது. மக்களின் அபிலாசைகளுக்கு விரோதமான போக்கை கைவிடும்படி, பிரித்தானிய தமிழர் பேரவையின் (BTF)  தலைமையிடம் பல தரப்பட்டவர்களும் கோரிக்கைகளை முன்வைத்து வரும் இவ்வேளை, துறைசார் நிபுணர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், முன்னாள் போராளிகள் என பலரும் தமது கருத்துக்களை ஊடக மூலம் வெளியிட்டு மக்களை தெளிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வகையில், தனது கருத்தை வழங்கிய தமிழீழ மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான சுடர் அவர்கள், எமது மக்களும் எமது தேசியக் கொடியும் பிரிக்க முடியாதவை என்பதை உலகுக்கு உணர்த்தும் பெரும் பொறுப்பு புலம்பெயர் அமைப்புகளிடமே உள்ளது என தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய கருத்தின் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது;

வரலாறு காணாத மிகப்பெரும் சோதனையை இன்று ஈழத் தமிழினம் சந்தித்து நிற்கின்றது. போரை வெற்றி கொண்டு அமைதியை நிலை நாட்டியிருப்பதாக உலகிற்குப் பிரகடனம் செய்திருக்கும் சிங்களம், கடந்த எட்டு ஆண்டுகாலப் பகுதியில் எமது மண் மீதும், மக்கள் மீதும் புதிய வடிவில் போர் தொடுத்துள்ளது.

படைக்கல வலிமையில் கடந்த ஆறு தசாப்தங்களாக வெளிப்படையாக சிங்களம் அரங்கேற்றிய தமிழின அழிப்பு என்பது இன்று சத்தம் சந்தடியின்றி நிகழ்ந்தேறுகின்றது.

காலநதியின் ஓட்டத்தில் உலக ஒழுங்கு கட்டவிழ்ந்து செல்கின்றது. புதுப்புது முடிச்சுக்களுடன் கட்டவிழும் உலக ஒழுங்கில் ஓயாத பயணமாக எமது விடுதலைப் போராட்டமும் முடிவின்றித் தொடர்கின்றது. எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலில் இருபது ஆண்டுகள் இயங்கிய தமிழீழ நடைமுறை அரசு எதிரியால் சிதைக்கப்பட்டு, எட்டு ஆண்டுகள் முடிவடைந்து விட்டன.
இருந்த பொழுதும் தமிழினத்தின் இதயங்களில் தணியாத தாகமாக, அணையாத தீயாகக் கொழுந்துவிட்டெரியும் தமிழீழ தனியரசுக்கான இலட்சியக் கனலை சிங்களத்தாலேயோ சர்வதேசத்தாலேயோ அணைத்துவிட முடியவில்லை. இராணுவ அடக்கு முறைகளுக்கு மத்தியில் கூட இன்றுவரை தாயகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களும், தேசிய நிகழ்வுகளும் சிவப்பு மஞ்சள் கொடிகளுடனேயே நடைபெறுகின்றன. ஆனால் புலம்பெயர் தேசங்களின் ஒரு சில தமிழ் அமைப்புக்கள் எமது தேசிய சின்னங்களை உதாசீனம் செய்து வருவதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை திட்டமிட்டு உருக்குலைக்க முயற்சிசெய்து வருவது மிகவும் வேதனை தருகிறது.

தமிழினத்தின் தேசிய சின்னங்களில் மிக முக்கிமானது தேசிக்கொடி. சத்திய இலட்சியத்தை உயிர் மூச்சாக வரித்துக் கொண்ட எமது மாவீரர்களின் தியாகத்தால் உருவாக்கப்பட்டது தான் எமது தேசிய கொடி. இது எமது தேசத்தின் அடையாளமாகும். தமிழ் மக்கள் தேசிக்கொடியை தமது உயிருக்கு உயிராக நேசிக்கிறார்கள், மதிக்கிறர்கள், வணங்குகிறார்கள். அதனை உரிய முறையில் ஏற்றி வணக்கம் செலுத்துவது எந்த இனத்திற்கும் உரிய அடிப்படை உரிமை. மனித உரிமைகளை மதிக்கும் புலம்பெயர் தேசங்கள் என்றுமே எமது தேசியக் கொடியை ஏற்றுவதற்கு தடை விதித்ததும் இல்லை.

தேசிய சின்னங்களை புறக்கணித்துவிட்டு, தேசிய இனத்திற்கான விடுதலைக்காக குரல் கொடுப்பதாக போலித்தனமாக மார்தட்டிவரும் எந்த அமைப்பும் தமிழரின் தேசிய விடுதலையையோ, நீதியையோ பெற்று தரப்போவதில்லை.

தமிழீழ போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் இலட்சியம் மாறப்போவதில்;லை. தமிழீழ விடுதலை என்ற உன்னத இலட்சியத்திற்காக போராடும் எந்த உண்மையான அமைப்பும் தேசிய அடையாளங்களை புறக்கணித்து விட்டு, உண்மையாக போராட முடியாது. தமிழ் மக்களை உணர்வுகளை கொச்சைப்படுத்தி, அவர்களின் அபிலாசைகளை மீறி அவர் மனங்களை காயப்படுத்தி செயற்படும் எந்த ஒரு அமைப்பும் தமிழர்களுக்கான எந்த நியாயமான தீர்வையும் பெற்றுத்தரப் போவதில்லை.

தேசியக் கொடியை புறக்கணிப்பதானது தமிழ் மக்கள் தன்மானத்தை கைவிட்டு சிங்களத்திடம் மண்டியிடுவதற்கு சமானமானது. எமது மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் காற்றில் பறக்கவிட்டு சிங்களத்தையோ சர்வதேசத்தையோ நாங்கள் யாசிக்க வேண்டிய தேவை எமக்கில்லை. சுதந்திரம் என்பது போராடிப் பெறவேண்டிய உரிமை. யாசித்து கிடைக்கும் பிச்சை அல்ல. நாங்கள் இப்போது வன்முறை விடுத்து மென்வழி தழுவி எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆயினும் எமது தேசியத்தையும் தேசிய அடையாளங்களையும் கைவிடவேண்டிய தேவை இல்லை.

தேசியக் கொடியை கைவிட்டால் மட்டுமே இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளமுடியும் என்று அப்பாவி மக்களை நம்ப வைக்கமுயலும் தரங்கெட்ட அரசியலில் இருந்து விடுபடுவோம். தமது சொந்த மக்களை தாமே முட்டாளாக்கும் அமைப்புக்களை இனம்கண்டு புறக்கணிப்போம். தேசியத் தலைவர் காட்டிய வழியை பின்பற்றுபவர்களும், தேசியக்கொடியை மதிப்பவர்களும் மட்டுமே எங்கள் பிரதிநிதிகள் ஆக முடியம். எமது மக்களும் எமது தேசியக் கொடியும் பிரிக்க முடியாதவை என்பதை உலகுக்கு உணர்த்துவோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!


க.சுடர் அவர்கள் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமன்றி, தமிழீழ சட்டக்கல்லூரியில் தனது சட்டக் கல்வியை நிறைவுசெய்து தமிழீழ சட்டவாக்கப் பணிகளில் பெரும்பங்கு வகித்தவர். அதன் பின்னர் மலேசியாவில் உள்ள University of Northampton இல் சட்டத்துறையில் மேலதிக பட்டங்களைப்பெற்று, தமிழீழ மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதியாக கடமையாற்றியவர். தேசியத் தலைவர் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான இவர், பல உயர் மட்ட இராஜதந்திர சந்திப்புக்களிலும் பங்கு கொண்டவர். இவற்றுக்கு மேலாக, தேசியப்பற்றுடன் இறுதிவரை களத்தில் நின்று, தனது உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவையாற்றியவர். இறுதி யுத்தத்தின் சாட்சியங்களுள் ஒருவரான இவர் புனர்வாழ்வு என்ற பெயரில் தடுத்துவைக்கப்பட்டு பல சித்திரவதைகளையும் அனுபவித்து மீண்டவர்.

 

Print Friendly, PDF & Email