SHARE

சிரேஷ்ட மனித உரிமைகள் சட்டத்தரணியும் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த தமிழ் அரசியல்வாதியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் 28.05 2017 அன்று தனது 83 ஆவது வயதில் இயற்கை எய்தினார். மிக நீண்டதும் சவால்கள் மிக்கதுமான அவரது அரசியல் பயணம் எப்போதுமே தமிழர்களின் நலன் சார்ந்ததாகவே இருந்ததுடன் தமிழ் தேசியத்தின்பால் அவர் கொண்டிருந்த அளவற்ற பற்றையும் வெளிக்காட்டியிருந்தது. சுமார் ஆறு தசாப்த காலமாக இலங்கை தமிழ் அரசியலில் மிகவும் காத்திரமான பங்கினை வழங்கிய அவரது அரசியல் பாதையின் சில முக்கிய தருணங்களை அவரது நினைவு நாளில் நினைவு கூறுவது சாலச் சிறந்ததாகும்.

அரசியல் பிரவேசம்

1950 களில் தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த அவர் தனது அரசியலுக்கான தளமாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸையே தெரிவு செய்திருந்தார். அமரர் ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள் மீது அவர் கொண்டிருந்த அளவற்ற பற்றே அதற்கு காரணமாக இருந்தது. அக்காலப்பகுதியில் ஜி ஜி பொன்னம்பலம் மற்றும் செல்வநாயகம் ஆகிய இருவருமே தமிழ் அரசியலில் கோலோச்சிக்கொண்டிருந்தனர். ஜி ஜி பொன்னம்பலம் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான விநாயகமூர்த்தி பொன்னம்பலத்தின் அரசியல் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்தார். பொன்னம்மபலத்தின் தேர்தல் வெற்றிகளின் பின்னால் இவரது கடும் உழைப்பும் இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.

ஜி ஜி பொன்னம்பலம் அவர்களின் மறைவின் பின்னர் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைமை பொறுப்பை அவரது மகன் குமார் பொன்னம்பலம் அவர்கள் ஏற்றார். ஏலவே குமாருடன் நீண்டகால நட்பு கொண்டிருந்த விநாயகமூர்த்தி அவர்கள் குமாருடன் இணைந்து மிகவும் ஆபத்தான காலகட்டங்களிலும் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடர்ந்தார். 21.12.1983 அன்று J R ஜயவர்தன அரசால் கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரசை பிரதிநிதிபடுத்தி குமாரும் விநாயகமூர்த்தியும் பங்குபற்றினர். 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் விநாயகமூர்த்தி அவர்கள் தமிழ் காங்கிரசின் சார்பாக யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டார். ஆனால் அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக பிரச்சார நடவடிக்கைகளில் அவரால் ஈடுபட முடியாதுபோனது. 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சார்பாக குமார் பொன்னம்பலம் தலைமையில் விநாயகமூர்த்திஇ கல்வியாளர் அதிபர் அருணாசலம் மற்றும் கலாநிதி குமரகுருபரன் ஆகியோர் கொழும்பில் போட்டியிட்டனர். ஆயினும் கொழும்பு வாழ் தமிழ் மக்கள் தொடர்ந்தும் பெரும்பான்மை கட்சிகளுக்கே வாக்கு செலுத்தியமையால் கொழும்பில் தமிழ் காங்கிரஸினால் பாராளுமன்ற பிரநிதித்துவம் எதுவும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

சட்டத்தரணி

நீதிமன்ற பதிவாளராக இருக்கையிலேயே கொழும்பு பல்கலை கழக சட்ட பீடத்தில் வெளிவாரி பட்டப்படிப்பை நிறைவு செய்த விநாயகமூர்த்தி அவர்கள் 1986 ஆம் ஆண்டு இலங்கை உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்தார். அன்று முதல் குமார் பொன்னம்பலம் அவர்களுடன் இணைந்து சட்ட தொழிலை ஆரம்பித்த அவர் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சட்டத்தரணியாக தொழில் புரிந்தார். அவசரகால சட்டம் மற்றும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் இளைஞர்களுக்காக இலவசமாகவே வாதாடி அவர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்தார். அவ்வாறு அவரால் விடுதலை பெற்றுக்கொடுக்கப்பட்டவர்களுள் முன்னாள் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரன் அவர்களும் ஒருவராவார். 2004 ஆம் ஆண்டு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற விநாயகமூர்த்தி அவர்களின் 70 ஆவது பிறந்ததின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட சந்திரசேகரன் அவர்கள் இவ்விடயத்தை மேடையில் நினைவு கூர்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அன்றைய காலப்பகுதியில் பயங்கரவாத தடை சட்டமானது அப்பாவி தமிழ் இளைஞர்கள் மீது கண்மூடித்தனமாக பிரயோகிக்கப்பட்டது. பெருமளவிலான தமிழ் இளைஞர்கள் வகைதொகையின்றி கைதுசெய்யப்பட்டு சிறைகளில் வாடினர். அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களின் நலனிற்காக விநாயகமூர்த்தி அவர்கள் இலவசமாக வாதாடினார். பிரதி சனிக்கிழமை தோறும் அவர் சிறைச்சாலைகளுக்கு சென்று கைதுசெய்யப்பட்டவர்களின் நலன் விசாரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அங்கு செல்லும் போது கைதிகள் வாசிப்பதற்காக பத்திரிகைகளையும் அவர்களின் உறவினர்களின் செய்திகளையும் தபால்களை எடுத்துச்செல்வார். ஒவ்வொரு சனிக்கிழமையையும் விநாயகமூர்த்தி அவர்களின் வருகையை எதிர்பாத்தவண்ணமே தாம் நாட்களை கழிப்பதாக விடுதலையான தமிழ் அரசியல் கைதிகள் தெரிவிப்பார்கள். பயங்கரவாத தடைசட்டத்தை சட்டப்புத்தகத்திலிருந்து நீக்குவதற்கு பாடுபடுவதையே தனது குறிக்கோளாக கொண்டிருந்த விநாயகமூர்த்தி அவர்கள் அவர் இறக்கும் வரை அதற்காக குரல் கொடுத்திருந்தார்.

அவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் சட்ட முக்கியத்துவம் வாய்ந்த உயர் நீதிமன்றத் தீர்ப்புகளாக இரு முக்கியமான வழக்குகளை குறிப்பிடலாம். விநாயகமூர்த்தி எதிர் இராணுவ தளபதி என்கின்ற வழக்கும் நாகமணி தெய்வேந்திரன் எதிர் சட்டமா அதிபர் என்கின்ற வழக்குமே அவையாகும். விநாயகமூர்த்தி எதிர் இராணுவ தளபதி என்கின்ற வழக்கில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச கொலையுடன் தொடர்பிருப்பதாக கூறி விமலேந்திரன் எனும் தமிழ் இளைஞன் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சட்ட ஏற்பாடுகளையும் மீறி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படாமல் பனாகொட இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இவ்விளைஞன் சார்பாக தானே மனுதாரராக விநாயகமூர்த்தி அவர்களால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கே இவ்வழக்காகும். மூன்று உயர் நீதியரசர்கள் கொண்ட குழாமினால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இவ்வழக்கு சட்ட முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக தீர்க்கப்பட்டது. அரசியலைப்பின் உறுப்புரை 13 (1) மற்றும் 13 (2) இன் கீழ் இவ்விளைஞனிற்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதுடன் சட்ட ஏற்பாடுகளை மீறி எவரொருவரும் கைதுசெய்யப்படக்கூடாது எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இலங்கை சட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள இவ்வழக்கு இலங்கை சட்ட கல்லூரி பாடவிதானத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.

நாகமணி தெய்வேந்திரன் எதிர் சட்டமா அதிபர் என்கின்ற மற்றைய வழக்கில் தெய்வேந்திரன் என்கின்ற தமிழ் இளைஞன் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்தவர் என்றும் அவர் அவ்வமைப்பின் ஆயுத பயிற்சி பெற்றார் என்றும் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். இவ்விளைஞனின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே அவரிற்கு எதிரான சாட்சியமாக அரச தரப்பால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது. அதாவது அவ்விளைஞனால் எவ்வித கட்டாயத்தின்பேரிலுமல்லாது சுயமாக வழங்கப்பட்டதாக கூறப்பட்ட வாக்குமூலத்தை தவிர எவ்வித சாட்சியமும் அரச தரப்பிடம் இருக்கவில்லை. சம்மந்தப்பட்ட இளைஞர் சார்பாக விநாயகமூர்த்தி அவர்கள் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்தார். தற்போதைய வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மாத்திரம் சாட்சியமாக கொண்டு எவரையும் குற்றவாளியாக தீர்ப்பளிக்க முடியாதென தீர்ப்பளித்த நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் எவரையேனும் குற்றவாளியாக தீர்ப்பதற்கு குற்ற வாக்குமூலம் மாத்திரமன்றி அதனை உறுதிப்படுத்தும் வேறு சாட்சியமும் இருக்க வேண்டுமென்கிற சட்ட முக்கியத்துவம் வாய்ந்த சரித்திரப் பிரசித்திபெற்றதுமான தீர்ப்பை வழங்கினார். இதன் பின்னர் அவசரகால சட்டம் பற்றும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களின் விடுதலைக்கு ஏதுவாக விநாயகமூர்த்தி அவர்களின் இவ்வழக்குகள் அமைந்திருந்தன.

கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்ட ஏராளமான தமிழ் இளைஞர்களின் சார்பாக நீதிமன்றங்களில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து அவ்விளைஞர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்த விநாயகமூர்த்தி அவர்களே 1993 மற்றும் 1994ம் ஆண்டுகளில் குறிப்பிட்ட ஒரு வருடத்தில் இலங்கை நீதிமன்றங்களில் அதிகளவான ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்த சட்டத்தரணியுமாவார்

பல முக்கியமான வழக்குகளில் ஆஜரான அவர் பிரேமதாச கொலை வழக்குஇ லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்குஇ சந்திரிகா கொலை முயற்சி வழக்குஇ மத்திய வங்கி குண்டு தாக்குதல் வழக்குஇ கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் வழக்குஇ தலதா மாளிகை குண்டு தாக்குதல் வழக்குஇ ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கொலை வழக்கு போன்ற வழக்குகளில் கைதுசெய்யப்பட்டவர்கள் சார்பாக ஆஜரானார்.

2001 இல் பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடனான சமாதான பேச்சுவார்த்தை காலப்பகுதியில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயம் எழுந்த பொழுதுஇ அது பற்றி தாம் விநாயகமூர்த்தியுடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுப்பதாக விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் குறிப்பிட்டிருந்தார். விநாயகமூர்த்தி அவர்களின் சேவைக்கு இதைவிட சிறந்த ஒரு அங்கீகாரமாக வேறெதுவும் இருக்க முடியாது.

வலிகாமத்திலிருந்து இடம்பெயர்ந்து இருபது வருடங்களுக்கும் மேலாக அகதி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியிருக்கும் மக்கள் மீளவும் தமது இருப்பிடங்களிற்கு மீள்குடியமருவதற்கு விநாயகமூர்த்தி அவர்கள் பெரும்பாடுபட்டார். அவர்கள் சார்பாக உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து பதினைந்து வருடங்களுக்கும் மேலாக வாதாடி வந்தார். அவற்றில் சில வழக்குகள் தற்போதும் நிலுவையிலுள்ளது.

தமிழ் காங்கிரசின் தலைமை பொறுப்பும் பாராளுமன்ற பிரவேசமும்

05.01.2000 அன்று குமார் பொன்னம்பலம் அவர்கள் சிங்கள பேரினவாதிகளின் கைக்கூலிகளினால் பேடித்தனமாக கொழும்பில் வைத்து கொல்லப்பட்டார். குமாரின் மறைவு விநாயகமூர்த்தி அவர்களை மிகவும் பாதித்திருந்தது. தனது குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு இழப்பாகவே குமாரின் இழப்பை அவர் கருதினார். அப்போதைய சந்திரிகா தலைமையிலான அரசாங்கமே இக்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டுமென பகிரங்கமாகவே குற்றம் சாட்டிய விநாயகமூர்த்தி அவர்கள் குமாரின் கொலைக்கு நியாயமான நீதி விசாரணை கோரினார். ஆனால் இன்றுவரை குமாரின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பது அவரை எப்போதுமே வருத்தத்திற்குள்ளாக்கியது.

குமாரின் இறப்பின் பின்னர் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைமை பொறுப்பை ஏற்குமாறு அவரது கட்சியினர் ஏகமனதாக கேட்டுக்கொண்டதற்கிணங்க விநாயகமூர்த்தி அவர்கள் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றார். அதனை தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு மார்கழி மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்திலே அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் விநாயகமூர்த்தி அவர்களின் தலைமையில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றியது. விநாயகமூர்த்தி அவர்கள் கணிசமான வாக்குகளை பெற்று பாராளுமன்றிற்கு தெரிவானார். மூன்று தசாப்தங்களிற்கு பின்னர் தமிழ் காங்கிரசிற்கு யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பெற்றுக்கொடுத்த பெருமை விநாயகமூர்த்தி அவர்களையே சாரும்.

ஒவ்வொரு மாதமும் அவசரகால சட்டம் பாராளுமன்றில் நீடிக்கும் பிரேரணை கொண்டுவரப்படும் போதெல்லாம் அதனை கடுமையாக எதிர்த்து வந்த விநாயகமூர்த்தி அவர்கள் அவசரகால விதிகளினால் தமிழ் மக்களுக்கு ஏற்படும் அவலத்தை அவசர கால சட்ட நீடிப்பு விவாதங்களின்போது எடுத்துக்காட்ட தவறுவதில்லை. ஒவ்வொரு மாதமும் வாக்கெடுப்பில் தவறாது கலந்து கொண்டு அவசரகால நீடிப்பு பிரேரணையை எதிர்த்து வந்தார். எனினும் இப்பாராளுமன்றம் ஒரு வருட காலமே நீடித்தது. முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறியதனால் பாராளுமன்றில் பெரும்பான்மையை இழந்த தனது அரசாங்கத்தை நம்பிக்கை வாக்கெடுப்பிலிருந்து காப்பாற்றுவதற்காக அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார். அச்சந்தர்ப்பத்தில் சந்திரிக்காவிற்கு எதிராக பாராளுமன்றில் பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு எதிர்க்கட்சிகள் முடிவெடுத்தபோது அதற்கு விநாயகமூர்த்தி அவர்கள் ஆதவளித்ததுடன் அப்பிரேரணையை கொண்டுவருவதில் முன்னாள் அமைச்சர் டிரோன் பெர்னாண்டோவுடன் இணைந்து செயற்பட்டார். எனினும் இப்பிரேரணை கொண்டுவரப்பட முன்னரே சந்திரிகா பாராளுமன்றை கலைத்து புதிய போது தேர்தலுக்கு உத்தரவிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம்

இத்தேர்தலின் போது தமிழ் கட்சிகள் அனைத்தும் தம்மிடையிலான பேதங்களை மறந்து ஒற்றுமையாக ஒரு குடையின்கீழ் தேர்தலை எதிர்கொள்வதினூடாக தமிழர்களின் உரிமைகளை மீட்க போராடவேண்டுமென்ற கருத்து முன்வைக்கப்பட்டது. தமிழர் விடுதலை கூட்டணிஇ டெலோ இ ஈ பீ ஆர் எப் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பொதுவான அரசியல் கட்டமைப்பை தோற்றுவிப்பதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்கான பேச்சுவார்த்தைகள் குமார் பொன்னம்மபலம் அவர்களின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றன. விநாயகமூர்த்தி அவர்களின் தலைமையில் தமிழ் 8 காங்கிரஸ் இப்பேச்சுவார்தைகளில் பங்குபற்றியது. கட்சியின் சின்னத்தை விடுத்து பொதுவான ஒரு சின்னத்தின் கீழ் போட்டியிடுவற்கு கட்சியில் எதிர்ப்பு எழுந்த போதும் தமிழர்களின் நலனே இன்றியமையாதது என்பதில் உறுதியாகவிருந்த அவர் கூட்டமைப்பை உருவாக்குவதில் உறுதியாக செயற்பட்டார். பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்ததன் பலனாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவானது. இக்கூட்டமைப்பின் கீழ் தமிழ் காங்கிரசின் சார்பாக யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட விநாயகமூர்த்தியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அமோக வெற்றியீட்டினர்.

இத்தேர்தலில் வெற்றிபெற்ற ரணில் விக்கிரமசிங்க தலையிலான அரசாங்கம் விடுதலை புலிகளுடன் சமாதான சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. இதன்போது இரு தரப்பினரதும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக விடுதலை புலிகளின் வேண்டுகோளிற்கிணங்க விநாயகமூர்த்தி அவர்கள் முக்கிய பங்காற்றினார்.

தமிழ் காங்கிரசிலிருந்து வெளியேறல்

2010 இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலானது விநாயகமூர்த்தி அவர்களின் இறுதித் தேர்தலாக அமைந்திருந்ததுடன் மட்டுமல்லாது அவரது அரசியல் வாழ்வின் ஒரு மைல்கல்லாகவும் அமைந்திருந்தது. ஏனெனில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக தான் அங்கம் வகித்த அகில இலங்கை தமிழ் காங்கிரசை விட்டு வெளியேறுவது என்ற மிகவும் வருத்தத்திற்குரிய முடிவை அவர் இத்தேர்தலில் எடுக்க நேரிட்டது. தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு தமிழ் காங்கிரஸ் தீர்மானித்தது. தனது கட்சியின் இந்த முடிவுடன் விநாயகமூர்த்தி அவர்களால் உடன்பட முடியவில்லை. எக்காலகட்டத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமை பாதுகாக்கப்படவேண்டுமென்பதில் விநாயகமூர்த்தி அவர்கள் மிகவும் தீவிரமாக இருந்தார். தமிழர்களின் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் அவர்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்கு தமிழர்கள் ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் செயற்படுவது இன்றியமையாதது என வலியுறுத்திய அவர் தனது கட்சியின் முடிவை மாற்றுவதற்கு பகீரத பிரயத்தனம் செய்தார். எனினும் அவரது முயற்சிகள் வெற்றியளிக்காததை தொடர்ந்து தாம் தமிழ் தேசிய அரசியலின் ஒற்றுமையை முன்னிறுத்தி அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைமை பொறுப்பை ராஜினாமா செய்ததுடன் அவரது ஆதரவாளர்களின் விருப்பத்திற்கிணங்க தமிழ் தேசிய கூட்டமைப்பிலேயே தொடர்ந்தும் இருப்பதற்கு முடிவு செய்தார்.

2010 சித்திரை மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட அவர் பெருமளவான வாக்குகளை பெற்று அமோக வெற்றியீட்டினார். அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதி தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார். பாராளுமன்ற கணக்காய்வு குழுவான கோப் குழுவின் உறுப்பினராகவும் பணி புரிந்தார். 2015 இல் பாராளுமன்றம் கலைக்கப்படும் வரும் வரை பாராளுமன்ற உறுப்பினராக பணி புரிந்த அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியன. அரசியல்வாதிகள் மீது பொதுவாகவே சுமத்தப்படும் இலஞ்சம்இ அதிகார போதைஇ அதிகார துப்பிரயோகம் போன்ற எவ்விதமான குற்றச்சாட்டுகளும் அவரது எதிரிகளால் கூட ஒருபோதும் அவரிற்கு எதிராக சுமத்தப்படவில்லை என்பதே அவரது அரசியல் நேர்மையையும் தூய்மையையும் பறை சாற்றி நிற்கும். அன்னாரின் இழப்பு தமிழ்ச் சமூகத்திற்கு ஓர் ஈடு செய்ய முடியாத இழப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது.

சட்டத்தரணிகள்

ஜனகன் தனபாலசிங்கம்
குமரேசன் புரந்தரன்

பெறாமக்கள்

Print Friendly, PDF & Email