SHARE

(கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின்)

கடவுளுக்கு காது நல்ல கூர்மை. அதனால் சத்தமாக வழிபட வேண்டிய தேவை இல்லை என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார்.

யாழ்.மேல் நீதிமன்றில் இன்றையதினம், நாயன்மார்கட்டு பகுதியில் அமைந்துள்ள மதவழிபாட்டு தளத்தில் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் அதிக சத்தம் எழுப்பி வழிபாட்டில் ஈடுபட்டுவதனால் தாம் பல இன்னல்களை எதிர்நோக்குவதாக அயலில் வசிக்கும் நபர் ஒருவர் தாக்கல் செய்த மனு தொடர்பிலான விசாரணை நடைபெற்றது.

அதன் போது குறித்த மனுதாரர் , அதிகாலை வேளைகளில் மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் குறித்த மதவழிப்பட்டு இடத்தில் கூடுவோர்கள் அதிக சத்தம் எழுப்பி வழிபாட்டில் ஈடுபடுவதனால் இருதய வருத்தம் உள்ள தான் பாதிக்கப்படுவதாகவும் , தனது சிறு பிள்ளைகளும் பாதிக்கப்படுவதாகவும் மன்றில் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து நீதிபதி தெரிவிக்கையில் , கடவுள் நல்ல காது கூர்மை உடையவர். அவரை அமைதியான முறையில் வழிபடலாம்.  எங்கள் உரிமை மத வழிப்பாட்டு உரிமை என்பது மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்க கூடாது.

தற்போது ஆலயங்களில் ஒலிபெருக்கி பாவனைகள் கணிசமான அளவு குறைந்து உள்ளது. கடவுளை அமைதியாக மற்றவர்களுக்கு மற்ற மதத்தினருக்கு இடையூறு விளைவிக்காத வகையில் வணங்குங்கள் என தெரிவித்தார்.
அத்துடன் குறித்த வழக்கு தீர்ப்புக்காக எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி ஒத்திவைத்தார்.
Print Friendly, PDF & Email