SHARE

(கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின்)

இன்று உலக ஊடக சுதந்திர தினம் (03) உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அந்தவகையில் பெரும் மனிதப்ரேவலம் நடந்தேறிய இலங்கைத் தீவிலும் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களையும் காணமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களையும் நினைந்து இன்று உலக ஊடக சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

1991ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, கலாசார நிறுவனத்தின் (யூனெஸ்கோ) பொதுமாநாட்டின் 26ஆவது கூட்டத்தொடரில் செய்யப்பட்ட விதப்புரையைத் தொடர்ந்து, வருடம்தோறும் மே மாதம் மூன்றாம் திகதியை உலக பத்திரிகைச் சுதந்திர தினமாக அனுஷ்டிக்கக் கோரும் பிரகடனத்தை 1993 டிசெம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியது.

தேசங்கள் மத்தியில் செம்மையானதும் சமநிலையானதுமான செய்திகளின் சுதந்திரமான பரிமாற்றத்தையும் உலகின் சகல பாகங்களிலும் இருந்து வருகின்ற தகவல்களின் சரியான தன்மையையும் நேர்மையையும் அறிந்துகொள்வதற்கான மக்களின் உரிமையையும் மேம்படுத்துவதே இத்தொனிப்பொருளின் நோக்கமாகும்.

அதேவேளை மறுபக்கத்தில் சுதந்திரமாக கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும் சுதந்திரமாகப் பத்திரிகைகளை வெளியிடுவதற்கும் செய்திகளைச் சுதந்திரமாக அடைவதற்கும் உலகுக்கு வாய்க்கப்பெற்ற ஓர் உரிமையைப் பாதுகாப்பதற்காகத் தங்களது உயிர்களைத் தியாகம் செய்தவர்களையும் சிறையில் அடைக்கப்பட்டுக் கொடுமைக்கு உள்ளாக்கப்படுபவர்களையும் நினைவுகூருவதற்கான சிறந்த ஒரு தருணமாகவும் இந்த தினம் அமைகிறது.

Print Friendly, PDF & Email