SHARE
வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மீது அதிகார முறைகேடு குற்றச்சாட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முன்வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள காணி ஒன்றை வாங்கிய குடும்பம் ஒன்றுக்கு எதிராக பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னிலையாகி ஆதாரங்களுடன் உண்மையை எடுத்துரைத்த சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன், இந்த குற்றச்சாட்டை மன்றில் முன்வைத்தார்.
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள காணி ஒன்றை குடும்பம் ஒன்று வாங்கியுள்ளனர். அந்தக் காணிக்கு மற்றொரு காணி ஊடாகச் செல்வதற்கு பாதை விடப்பட்டிருந்தது. அந்தப் பாதையை காணியின் உரிமையாளர்  மூடியுள்ளார்.
இந்த நிலையில் காணியை வாங்கியவர்கள் அந்தப் பாதையை மூடிப் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து தமது காணிக்குச் சென்றுள்ளனர்.
தம்மால் போட்டப்பட்ட பூட்டை உடைத்து தமது காணி ஊடாக அத்துமீறினர் என்று அந்தக் குடும்பத்தின் தாயார் மற்றும் மகனுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பாதையை மூடியவர் முறைப்பாடு வழங்கினார்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பூட்டை உடைத்து காணிக்குள் அத்துமீறினர் குற்றச்சாட்டில் தாயாரும் மகனும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் அண்மையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
பொலிஸாரின் அறிக்கையை விசாரணை செய்த நீதிவான் நீதிமன்று, குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் பிணையில் விடுவித்தது.
அத்துடன், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் காணிக்குச் செல்வதற்கான பாதை தொடர்பில் நேரில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முன்னிலையாகினர். அவர்கள் சார்பில் சர்மினி விக்னேஸ்வரன் முற்பட்டார்.
“காணிக்கான பாதையை இந்த வழக்கின் முறைப்பாட்டாளர் மூடி வைத்துள்ளார். அந்தப் பாதையை தெளிவாகக் காட்டும் ஒளிப்படங்களை மன்று கவனத்தில் எடுக்கவேண்டும்” என்று அவற்றை மன்றிடம் சமர்ப்பித்தார் சட்டத்தரணி.
“இந்த வழக்கின் அரச உயர் மட்டத்தில் பதவி வகிக்கும் அதிகாரி ஒருவர் செல்வாக்குச் செலுத்துகின்றார். அவருக்கு ஆதரவாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அதிகார முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.
இந்த மாண்புமிகு மன்றின் உத்தரவுக்கு அமைய நேரில் விசாரணை செய்யச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் இடமாற்றம் வழங்கியுள்ளார்.
அந்த பொலிஸ் அதிகாரியின் நடவடிக்கைகளுக்கு அஞ்சியே பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த நீதிமன்றின் கட்டளையை நிறைவேற்றத் தவறியியுள்ளனர்” என்று சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் மன்றில் சமர்ப்பணம் செய்தார்
Print Friendly, PDF & Email