SHARE

யாழ்ப்பாணம் வரணி சிமில் கண்ணகை அம்மன் ஆலயத்தில், சாதிய பாகுபாடு காரணமாக நேற்று JCB இயந்திரத்தின் மூலம் தேர் இழுத்த விவகாரத்தை தமிழ்பக்கம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருந்தது. ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் இது பெரும் விவாதமாக இன்று மாறிய நிலையிலும், இன்றும் அநாகரிகமான நடவடிக்கையில் ஆலய நிர்வாகம் ஈடுபட்டது.

தீர்த்தக்கேணியை சுற்றி முள்கம்பி வேலியிட்ட பின்னரே தீர்த்தோற்சவம் நடந்தது.

ஆலய சூழலில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் யாரும் தீர்த்தக்கேணிக்குள் இறங்ககூடாது என்பதற்காக, தீர்த்தக்கேணியை சுற்றிலும் முள்கம்பி வேலியிடப்பட்டிருந்தது.

அதே சமயத்தில், இன்று தீர்த்தோற்சவத்தை யாரும் புகைப்படம் எடுக்காமலும் கவனித்துக் கொண்டது ஆலய நிர்வாகம்.

நேற்று தொடக்கம் சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் பெரும் சரச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகிறார்கள். இந்தநிலையில், நாளை கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவில் பங்குபற்ற அனுமதிக்கப்படாத ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் இளைஞர்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்

Print Friendly, PDF & Email