SHARE

யாழ்.நாகர் கோவிலில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர் எனும் குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட தென்னிலங்கை மீனவர்களை சில மணி நேரத்தில் கடற்படை விடுவித்தது.

அது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்.நாகர் கோவில் கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை ஈடுபட்டிருந்த  81 தென்பகுதி மீனவர்களை கைது செய்த கடற்படையினர் அவர்களின் 21 படகுகளையும் கைப்பற்றி இருந்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களிடம் கைப்பற்றப்பட படகுகளையும் கடற்படையினர் பருத்தித்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று தடுத்து வைத்திருந்தனர்.

அதன் பின்னர் சில மணிநேரம் கழித்து  கைப்பற்ற பட்ட படகுகளையும் , கைது செய்யப்பட்ட மீனவர்களையும் கடற்படையினர் விடுவித்துள்ளனர்.

தென்னிலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டமையை அடுத்து பருத்தித்துறை மீனவர்கள் கடற்படை முகாம் முன்பாக கூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

அதன் போது குறித்த மீனவர்களுடன் பேசிய கடற்படை அதிகாரி , குறித்த பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை பிடிக்கும் தொழில் செய்வதற்கான அனுமதி உண்டு என யாழ்.மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்தே தாம் கைது செய்த மீனவர்களை விடுவித்தோம் என தெரிவித்தார்.

அதன்பின்னர் கடற்படை முகாம் முன்பாக கூடி தமது எதிர்ப்பை தெரிவித்த பருத்தித்துறை மீனவர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர்.

Print Friendly, PDF & Email