SHARE

பிரித்தானியாவிடம் இருந்து 1948ம் ஆண்டு சுதந்திரத்தை பெற்றுக் கொண்ட இலங்கையின் அரசியல் யாப்பானது ஒற்றையாட்சி முறையை அடிப்படையாக கொண்ட அரசியல் யாப்பாகவே காணப்பட்டது. அக்காலப்பகுதியில் சிங்களவர்களும், தமிழர்களும் இணைந்து நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருந்தமையால் “நாம் இலங்கையர்” என்ற கருப்பொருளே வலுப்பெற்றிருந்தது.

காலாணித்துவம் காலத்தில் இருந்தே தமிழர்கள் கல்விமான்கள் ஆகவும் அரசின் முக்கிய பொறுப்புக்களில் உயர் பதவி வகிப்பவர்கள் ஆகவும் மற்றும் வர்த்தகர்கள் ஆகவும் இலங்கை முழுவதும் பரந்து வாழ்ந்து வந்தார்கள்.
இது சிங்களவர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை செலுத்தியது. இதனால் சுதந்திரம் அடைந்து ஒரு தசாப்த காலத்திலேயே தமிழர்கள் மீது 1957 இல் இன கலவரம் ஒன்று நிகழ்ந்தது.

முன்னைய காலங்களில் இருந்து வந்த கசப்பான அநுபவங்களினாலும் இனக் கலவரத்தினாலும் அச்சம் அடைந்த தமிழ் தலைவர் தந்தை செல்வநாயகம் அவர்கள் சமஸ்டி முறையிலான ஒரு அரசியல் யாப்பு முறையை இலங்கையில் உருவாக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டினார். அதன் அடிப்படையில் 1957இல் இலங்கை பிரதமர் பண்டார நாயக்கவுடனும், 1965இல் டட்லி சேனநாயக்கவுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டிருந்தார். இவை இலங்கை அரசினால் நிறைவேற்றப்படவில்லை. அத்துடன் அகிம்சை வழி போராட்டமும் அரச அடக்கு முறையினால் நசுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாம் குடியரசு யாப்பு, இரண்டாம் குடியரசு யாப்பு ஈழத்தமிழரது அபிலாசைகளை அரசியல் உரிமைகளை அங்கீகரிக்கவில்லை. அவை அடிப்படையில் சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத்தில் அமைந்த ஒற்றை ஆட்சி முறையாகவே காணப்பட்டது.

புரிந்துணர்வு உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டமை, இனக்கலவரம், திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் அகிம்சை போராட்டத்தின் தோல்வி என்பவற்றால் விரக்தியுற்றிருந்த தமிழ் தலைவர் தந்தை செல்வநாயகம் அவர்கள் 1976ம் ஆண்டு தமிழர்களுக்கான தீர்வு ‘தனி தமிழ் ஈழம்’ என்ற தீர்மானத்தை வட்டுக்கோட்டை என்ற இடத்தில் நிறைவேற்றினார். இது தமிழர்களின் சுயநிருநயத்திற்கான போராட்ட வரலாற்றில் முக்கிய தீர்மானமாக “வட்டுக்கோட்டை தீர்மானம்” என்று அழைக்கப்படுகின்றது.

விடுதலை அமைப்புக்களின் தோற்றம்

இத்தீர்மானத்தை தொடர்ந்து தமிழ் இளைஞர்கள் பலர் சிறிது சிறிதாக ஆயுத போராட்ட இயக்கங்களை ஆரம்பித்தனர். தாயகப்பகுதியில் அத்துமீறிய சிங்கள குடியேற்றம், கல்வி தரப்படுத்தல் சட்டம் மூலம் பல்கலைக்கழக கல்வியை இழந்த இளைஞர்கள் 1983ம் ஆண்டில் இலங்கை முழுவதும் தமிழ் மக்களுக்கு எதிராக அரச ஆதரவுடன் நடைபெற்ற இனக்கலவரம், யாழ்நூலகம் எரிப்பு என்பவற்றால் விரக்தியுற்றிருந்த இளைஞர்கள் பெருமளவில் ஆயுத போராட்ட இயக்கங்களில் சேரத் தொடங்கினர். இதனால் ஆயுத போராட்ட இயக்கங்களின் வளர்ச்சி முனைப்பு பெற்றது.

இதன் விளைவாக 1987ம் ஆண்டு இந்திய அரசின் வலியுறுத்தலின் பிரகாரம் இலங்கையின் அரசியல் யாப்பில் 13ம் இலக்க திருச்சட்டம் கொண்டு வரப்பட்டு மாகாண சபைகள் அமைக்கப்பட்டன. ஆனால் அவை ஈழத்தமிழர்களது சுயநிருநய உரிமையை ஏற்பதாக அமையவில்லை. இதனால் எமது விடுதலை அமைப்பு இத் தீர்வை ஏற்றுக் கொள்ளவில்லை.

சுயநிருநய உரிமை

1860ம் ஆண்டுகளிலேயே சுயநிருணய உரிமை தொடர்பான எண்ணக்கரு உலகில் தோற்றம் பெற்றுவிட்டது. இருந்தும் 19ம், 20ம் நூற்றாண்டுகளிலேயே சுயநிருநயம் தொடர்பான கோட்பாடு வலுப்பெற தொடங்கியது. முதலாம் உலகப்போர் காலத்தில் சுய நிருநயம் தொடர்பாக அமெரிக்க அதிபர் வூட்றோவ் வில்சன் கூறுகையில் “மக்களது தேசிய அபிலாசைகளுக்கு கட்டாயம் மதிப்பளிக்க வேண்டும். மக்கள் சுயமாக தங்களை தாங்களாகவே ஆழக்கூடியதாக ஆட்சி முறை அமைதல் வேண்டும்.”

தொடர்ந்து இரண்டாம் உலகப்போர் கால முடிவில் காலாணித்துவத்திற்கு எதிராக சுதந்திரவாதம், தன்னாட்சி வாதம், பாதுகாப்பு வாதம் என்ற கோட்பாடுகள் நவீன உலகில் ஆதிக்கம் பெறத் தொடங்கியது. இவை சுயநிருநயத்திற்கான வெற்றியாகவும் அமைந்துவிட்டன.

ஆனால் அக்காலப் பகுதியில் காலாணித்துவத்திற்கு எதிரான போராட்டம் சுயநிருநயத்திற்கான வெற்றியாக அமைந்தாலும் அவை பல்லின மக்களையும் இணைக்கின்ற ஒரு தேசிய வாதமாகவே காணப்பட்டது. காலப்போக்கில் இத்தேசிய வாதமானது நிலப்பகுதி ஒன்றில் பெரும்பான்மையாக வாழுகின்ற ஒரு இனம் இன்னொரு தேசிய இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக அமைந்துவிட்டது. இதனால் உள்ளக சுயநிருநய உரிமை எனும் கோட்பாடு வலுப்பெறத் தொடங்கியது.
உள்ளக சுயநிருநய உரிமை எனும்போது ஒரு நிலப்பகுதி ஒன்றில் ஒரேமொழி கலாசாரங்களைக் கொண்டு கூட்டமாக சிறுபான்மையாக வாழ்கின்ற தேசிய இனம் ஒன்றிற்கு சம உரிமையும், சம சந்தர்ப்பமும் வழங்கப்பட்டதுடன் சுதந்திரமாக தமது இறையாண்மையை தீர்மானிக்கும் உரிமையாகும்.

எமது விடுதலை அமைப்பும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்ட எமது நிலங்களை விடுவித்து அங்கு பொலிஸ், நீதிமன்றம், மனிதவுரிமைகள் போன்ற சிவில் அமைப்புக்களை உருவாக்கி ஒரு நடைமுறை அரசையே நிர்வகித்து வந்தது. இத்தகையதொரு படை வலுச்சமநிலையில்தான் ஜரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இலங்கை அரசுடன் இணைந்து உள்ளக சுயநிருய அடிப்படையில் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்ற ஒரு பிரகடணத்தை வெளியிட்டனர். அதுவே “ஒஸ்லோ பிரகடனம் ” என்று அழைக்கப்படுகின்றது.

இன அழிப்பு

அதனை தொடர்ந்து வந்த காலப்பகுதியில் இலங்கை அரசானது சுயநிருநய உரிமைக்காக போராடிய தமிழ் மக்கள் மீது தன்சார்பிணை நாடுகள் சிலவற்றின் மறைமுக ஆதரவுடன் ஒரு இனவழிப்பு யுத்தத்தை நடாத்தி விடுதலைப் புலிகளின் இராணுவக்கட்டமைப்பை முற்றாக அழித்து தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்தது.

இதனையடுத்து இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் வெளிவரத் தொடங்கியது அமெரிக்க மற்றும் ஜரோப்பிய நாடுகள் ஜ.நா. மனித உரிமை ஆணைக்குழு ஊடாக போர் குற்றத்திற்கு பொறுப்பு கூற வேண்டும் என்ற தீர்மானத்தை இலங்கை மீதி கொண்டுவந்தது. ஆனால் இலங்கை அரசும் தன்மீதான சர்வதேச அழுத்தத்தில் இருந்து விடுபடுவதிலேயே ஆர்வம் காட்டி வருகிறது.

நல்லிணக்கம் என்பது ஒரு தரப்பு மற்றைய தரப்பை சரிசமனாக ஏற்று பரஸ்பரம் விட்டுக்கொடுத்து நடப்பதாகும். மாறாக சுய நிருநயம் வேண்டி சுமார் அறுபது ஆண்டுகாலம் போராடி இனப்படுகொலைக்கு உள்ளான இனத்தை சரணாகதி அடையச்செய்வதல்ல.

இவ் நல்லாட்சி காலத்திலும் தமிழர் தாயக பிரதேசங்களில் அத்து மீறிய சிங்கள குடியேற்றம், இராணுவத்தால் நில ஆக்கிரமிப்பு, சிவில் நிருவாகத்தில் இராணுவ தலையீடு, இராணுவத்திடம் உயிருடன் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான நீதி, அரசியல் கைதிகளின் விடுதலை, போர் குற்ற விசாரணை என தமிழர்களது அடிப்படை பிரச்சனைகள் தீர்வின்றி தொடர்கின்றது.

சிங்கள பேரினவாத அரசு உண்மையிலேயே நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்த விரும்பினால் தமிழர்களது இப்பிரச்சனைகளை தீர்த்து வைக்கும். இவ் நல்லிணக்க கோரிக்கைகள் தமிழர் தரப்பில் 1987ம் ஆண்டு காலப் பகுதியிலேயே விடுதலை அமைப்பின் யாழ்ப்பாண அரசியல்துறை பொறுப்பாளரும், யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனுமாகிய திலீபன் அவர்களாள் முன்வைக்கப்பட்டு உணவு தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது. இந்திய இலங்கை அரசுகள் அதனை நிறைவேற்றாமையினால் இறுதியில் அவர் வீரச்சாவினை தழுவிக் கொண்டார்.

திலீபன் அண்ணாவின் கோரிக்கைகளாக,
1. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்.
2. தமிழர் தாயக பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்து.
3. பாடசாலை, கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள இராணுவ முகாங்களை அகற்று.
4. துணை ஆயுத குழுக்களிடம் இருக்கும் ஆயுதங்களை மீளப் பெறு.
5. தமிழர் தாயகத்தில் புதிதாக திறக்கும் பொலிஸ் நிலையங்களை நிறுத்து.
இவை தமிழீழ தனியரசை அமைப்பதற்கான கோரிக்கைகள் அல்ல, அடிப்படையில் நல்லிணக்கத்திற்கான கோரிக்கையே.

இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக இன அழிப்பு சிங்கள அரசு யுத்த வெற்றிச் சின்னங்களையும் பௌத்த சின்னங்களையும் தாயக பிரதேசங்களில் அமைத்து சிங்கள மயமாக்கலை மேற்க்கொண்டு வருகின்றது.
வரப்போகும் இலங்கையின் புதிய அரசியல் யாப்பும் தமிழர்களின் நிலைப்பாடும்.
மலரப்போகும் இலங்கையின் அரசியல் யாப்பானது ஒருமித்ததும், பிளவுபடாததுமான ஒரு நாட்டிற்குள் தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்ப்பு காண்பதாக அமையும் என யாப்புருவாக்க குழுவின் தலைவர் ஜயம்பதி விக்கிரம ரத்தின குறிப்பிடுகின்றார். மேலும் இது ஒரு ஒற்றையாட்சி முறையில் அமைந்த யாப்பாகவே இருக்கும் என்பதும் இதற்கு தமிழர் தலமை இணங்கியது வரவேற்கத்தக்கதென்றும் குறிப்பிடுகின்றார்.

உண்மையிலேயே இத்தகய தீர்வானது சுமார் அறுபது ஆண்டுகாலமாக சுயநிருநயத்திற்காக போராடி இனப் படுகொலைக்கு உள்ளான மக்களுக்கு தீர்வாக அமையப் போவதில்லை.

தமிழர்களின் நடைமுறை அரசியல் தலைமைகளில் சிலர் விடுதலை போராட்டத்தை ஏற்காதவர்களாகவும், விடுதலைப் போராட்டத்தின் தியாகங்களையும் மக்களது அபிலாசைகளையும் அறியாதவர்களாகவே காணப்படுகின்றார்கள்.

சுயநிருநயத்திற்காக போராடும் ஒரு இனத்தின் தலைவர்கள் கட்சி சார்ந்த தேர்தல் அரசியலில் ஈடுபட மாட்டார்கள். சலுகை அரசியலையோ சரணாகதி அரசியலையே மக்கள் மத்தியில் முன்னிலைப்படுத்தமாட்டார்கள். ஒரு விடுதலை இயக்க காலத்தில் வாழ்ந்த தாயக மக்களுக்கு இதன் அனுபவம் நிச்சயமாக இருக்க வேண்டும். தோல்வி மனப்பாங்கில் இருந்து நாம் மீண்டும் வர வேண்டும்.

இலங்கை நாடாளுமன்றத்தினால்தான் எமது சுயநிருநய உரிமை அங்கிகரிக்கப்பட வேண்டுமென்றால் அது நடை பெறாத விடயம். இலங்கை அரசுதான் எமக்கான தீர்வை வழங்க வேண்டும் என்று தமிழர்கள் நினைப்பது பயனற்ற எண்ணக்கரு.
எமக்கு போர்க்குற்றம், இனவழிப்புக்கான நீதி வழங்கப்பட வேண்டும். நாம் இவற்றை ஜக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதி மன்றத்திற்கு கொண்டு செல்வதன் மூலம்தான் பெற்றுக் கொள்ள முடியும். உள்நாட்டு நீதி விசாரனை ஊடாக நாம் ஒருபோதும் நீதியினைப் பெற்றுவிட முடியாது.

நவீன காலத்தில் சுயநிருநய உரிமைக்கான போராட்டங்கள்

இன்றும் எம்மைப் போல பல தேசிய இனங்கள் தமது சுயநிருநய உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மீது அரச அடக்குமுறை தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.

ஸ்பெயினில் உள்ள கட்டலோனியா நாடாளுமன்ற தலைவர் அந் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு முரணாகவே பிரிந்து போவதற்கான வாக்கெடுப்பை நடாத்தினார். இன்று அவர் நீதி விசாரனையை எதிர் கொள்கின்றார். சில வேளைகளில் அவர் சிறைத்தண்டனை கூட அனுபவிக்க கூடும். ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டியது அவர் தன் மக்களுக்காக ஆபத்தினை எதிர் கொள்வதற்கு தயாராகவே இருந்தார்.

அதுபோல குர்திஸ் மக்களும் சுய வாக்கெடுப்பின் மூலம் பிரிந்து செல்வதற்கான தமது விருப்பத்தினை தெரிவித்தார்கள். சர்வதேச நீதி மன்றத்திடம் தமது பிரச்சினைகளை எடுத்துச் சென்று அங்கு கிடைக்கப்பெறுகின்ற நீதியின் மூலம் தென்சூடான் மற்றும் கொசாவா மக்கள் தமது சுய நிர்ணய உரிமையை வென்றெடுத்தனர்.

(சுயநிருணயத்திற்கான பொது வாக்கெடுப்பில் குர்திஸ்தான்)

ஜக்கிய இராச்சியத்தில் உள்ள ஸ்கொட்லாந்து மக்கள், கனடாவின் கியுபெக் மக்கள் பொது வாக்கெடுப்பின் மூலம் தாம் சேர்ந்து வாழ்வதென்று தமது சுய நிருநய உரிமையை வெளிப்படுத்தினார்.

எனவே ஈழத்தமிழர்களும் சுயநிருநய அடிப்படையில் அமையப்பெறாத இலங்கையின் புதிய அரசியல் யாப்பிற்கு எதிராக வாக்களித்து எமது எதிர்ப்பை தெரிவிப்பதுடன் எமது சுய நிருநயத்திற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தல்

தமிழர்களை பொறுத்த வரையில் அவர்கள் இலங்கை உட்பட தமிழ்நாடு, ஜரோப்பியா, கனடா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் என உலகின் சகல பாகங்களிலும் பரந்து வாழ்கின்றார்கள்.

இவ்வாறு பரந்து வாழும் எங்களது இரண்டாம் தலைமுறையினர் கல்வியாளர்களாக, மனிதவுரிமை செயற்பாட்டாளர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக, வர்த்தகர்களாக, ஊடகவியலாளர்களாக, சட்டத்தரனிகளாக இருக்கின்றார்கள். இவர்களில் பலர் தாம் வாழ்கின்ற அந்தந்த நாடுகளின் தாய்மொழிகளை சரளமாக பேசக் கூடியவர்கள்.

புலம் பெயர் தேசங்களில் உள்ள இளைஞர் அமைப்புக்கள் பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள், கோயில்கள் என்பவற்றின் ஊடாக இவர்களை அணுகி நாம் பலம்மிக்க ஒரு வலையமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.
அதைவிட ஜரோப்பியா, கனடா மற்றும் அமெரிக்க நாடுகளில் பொதுவாக எல்லா நாடுகளினதும் தூதுவராலயங்கள் இருக்கும். நாம் இவ் அதிகாரிகளை சந்தித்து எமது பிரச்சனைகளைக் கூறி எமக்கான ஆதரவினை பெற முடியும்.

எம்மைப் போல சுயநிர்ணயத்துக்காக போராடுகின்ற பல தேசிய இனங்களும் அவற்றின் அமைப்புக்களும் இந் நாடுகளில் இருக்கின்றது. நாம் இவர்களை அணுகி எமக்கான ஆதரவினை திரட்டிக்கொள்ள முடியும். அதே போல தாயகத்திலும் நாம் எல்லை கிராமங்களில் இருந்து எமது பிரச்சாரங்களை ஆரம்பிக்க வேண்டும். அங்குள்ள கோயில்கள், தேவாலயங்கள், மாணவர் அமைப்புக்கள், இளைஞர் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் போன்றவர்களை அணுகி எமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். விளையாட்டுக்கள், கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் என்பவற்றை நடாத்துவதன் மூலம் இலங்கை அரசாங்கத்தால் வடக்கு, கிழக்காக பிரிக்கப்பட்டிருக்கும் எமது தாயகப்பகுதியை நாம் ஒன்று சேர்க்க முடியும். எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக நாம் ஊடக ஆதரவினை கட்டியெழுப்புதல் வேண்டும். சர்வதேச மட்டத்திலும் எமக்கு ஊடக ஆதரவை பெறவேண்டும்.

இவ்வாறு நாம் ஒன்றிணைந்து ஒரே நாளில் சம நேரத்தில் உலகம் முழுவதும் வீதிக்கு இறங்கி எமக்கான சுயநிருநய உரிமையையும், இனவழிப்பிற்க்கான நீதியை கேட்டு போராடுவோமாக இருந்தால் நிச்சயமாக உலகநாடுகளின் ஆதரவை எமதாக்கி கொள்ளலாம. கட்டலோனிய மக்கள் தங்கள் தாய் நிலத்தில் மட்டும்தான் போராடினார்கள். ஆனால் ஈழத்தமிழர்கள் உலகம் முழுவதிலும் போராடும் ஆற்றல் உடையவர்கள் என்பதை எல்லோரும் நினைவில் கொள்க. 

-தாமோதரம்பிள்ளை மயூரன்
(ஆசிரியர், தாயக விடுதலை செயற்பாட்டாளர் )

Print Friendly, PDF & Email